மதுரை: மதுரையில் 47 ஆண்டு நடந்த சொத்து வழக்கில் இருதரப்பையும் அழைத்து பேசி கோர்ட் பைசல் செய்தது.
மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்தவர் வீரணன். இவர், உறவினர் மாயாண்டி உட்பட சிலர் மீது சொத்து பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு, 1963ல் முன்பு மகாலில் செயல்பட்டு வந்த கோர்ட்டில் நடந்தது. வீரணனுக்கு சாதகமாக 1965ல் தீர்ப்பு கூறப்பட்டது. சொத்தை கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. மாயாண்டி உட்பட உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்தை ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, மதுரை கூடுதல் முன்ஷிப் கோர்ட்டில் வீரணன் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் எதிர்தரப்பில் நான்கு பேர் ஆஜராகி வந்தனர். பல ஆண்டுகள் கடந்த நிலையில் எதிர்தரப்பில் 40 வாரிசுகள் வரை ஆஜராகி வந்தனர். வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இருதரப்பிலும் சமரசம் செய்து கொள்வதாக வீரணன் தரப்பில் வக்கீல் ஜானகிராமுலு, மாயாண்டி தரப்பில் வக்கீல் ராஜாராம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிபதி நம்பிராஜன், இருதரப்பையும் அழைத்து பேசி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார். 47 ஆண்டுகள் நடந்த சொத்து வழக்கு கோர்ட் நடவடிக்கையால் முடிவு காணப்பட்டது.Courtesy :Dinamalar