பாலமேடு : பாலமேடு பகுதியில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மொச்சை விளைச்சல் அதிகம். பாலமேடு பகுதியில் விளையும் கொய்யா, முருங்கை, மா, சாத்தையாறு அணையில் கிடைக்கும் மீன் என பிற இடங்களில் கிடைப்பதை விட இங்கு ருசி அதிகம். அதே போல மானாவாரியாக பயிரிட்டு பருவ மழையால் வளர்ந்து, பனியில் நனைந்து, பலன் தரும் பாலமேடு மொச்சைக்கு கூடுதல் ருசி உண்டு. மதுரை உட்பட பல இடங்களில் பாலமேடு மொச்சை என கூவி விற்கும் அளவுக்கு தனிமவுசும் உண்டு. கற்கள் நிறைந்த செம்மண் கரிசல் நிலத்தில் விளைந்து பலன் தருவதே இதற்கு காரணம். ஆடிப்பட்டத்தில் விதைத்து தையில் பலன் தரும் மொச்சைக்கு, இந்த ஆண்டு பருவ மழை தவறியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தொடர் மழை பெய்தது. இதனால் மானாவாரி பயிர்கள் துளிர் விட்டு விவசாயிகளுக்கு நல்ல பலனை தந்தன. பருவ நிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு மாதம் மொச்சை கிடைக்கும் வாய்ப்பை விவசாயிகள் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் கிலோ ரூ. 40க்கு விற்ற மொச்சை அதிக விளைச்சல் காரணமாக ரூ, 20 க்கு கிடைக்கிறது. பாலமேடு விவசாயி பெரியசாமி: பாலமேடு மதுரை ரோட்டில் மூன்று ஏக்கர் நிலத்தில் தனி மொச்சையாக பயிரிட்டுள்ளேன். உரிய காலத்தில் மழை பெய்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும். இனி மழை பெய்ய வாய்ப்பில்லை. பனியால் மட்டுமே விளையும் வாய்ப்பு உள்ளது. பனி அதிகம் இருக்க வேண்டும், அதன் மூலம் பலன் பெற வேண்டும்.இதற்கு இயற்கை ஒத்துழைக்க வேண்டும் என கூறினார். வியாபாரி செல்வம்; இந்த ஆண்டு மொச்சை வியாபாரம் ஆரம்பத்தில் நல்ல சூடு பிடித்தது. கிலோ ரூ. 40க்கு விற்கும்போது நல்ல லாபம் இருந்தது. தற்போது விவசாயிகளிடமிருந்து வாங்கிய பொருளை அழிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்தார். வெங்காயம், கத்தரி, தக்காளி, உருளை, என அனைத்து காய் கறிகளும் அதிக விலைக்கு விற்கும் போது, தரமான சுவை மிகுந்த மொச்சை குறைந்த விளைக்கு கிடைப்பது இயற்கையின் வரப்பிரசாதமே.
Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=173114
Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=173114
0 comments:
Post a Comment