மதுரை : மதுரையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்ய 4 தற்காலிக மார்க்கெட்டுகள் ஜன. 27ம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலையும் இறக்கை கட்டி பறக்கிறது. இது பல குடும்பங்களை நேரடியாக பாதிப்பதால், அவற்றின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதையடுத்து சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய மாநகராட்சிகளில் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்யும் மார்க்கெட்டுகளை திறப்பது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை மூலம் காய்கறிகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி, வெளிமார்க்கெட் விலையைவிட "கம்மி'யான ரேட்டில் வினியோகிக்கப்பட உள்ளது. மதுரையில் இவ்வகையில் 10 மார்க்கெட்டுகள் துவக்கப்படஉள்ளது. இதற்காக கலெக்டர் காமராஜ், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் குமார் உட்பட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். முதற்கட்டமாக ஜன. 27ம் தேதி 4 இடங்களில் மார்க்கெட்டுகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆரப்பாளையம் பகுதியில் ஒரு கல்யாண மண்டபம், மகபூப்பாளையம் பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம், எல்லீஸ்நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு புதிய கட்டடத்தில் உள்ள சில கடைகள், ஒத்தக்கடையில் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடையில் இந்த மார்க்கெட்டுகள் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ளன. இவை விலைவாசி குறையும் வரை செயல்படும். இவற்றின் வெற்றியை பொறுத்து, கூடுதல் கடைகள் திறக்கப்படும். இவையே உழவர்சந்தை போல அமையும் என தெரிகிறது.
Courtesy : http://www.dinamalar.com/district_detail.asp?id=173476
Courtesy : http://www.dinamalar.com/district_detail.asp?id=173476
0 comments:
Post a Comment