Tuesday, January 25, 2011

மதுரை சிறை கைதிகள் அடிக்கடி மோதிக் கொள்வதால் அபாயம்

Tuesday, January 25, 2011
மதுரை : மதுரை சிறையில் கைதிகள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர். இதை முன்கூட்டியே கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய விழிப்பு மற்றும் உளவுப்பிரிவு(விஜிலென்ஸ்) போலீசார் தூங்குவதால், கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சிறையில் 2000த்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், தண்டனை பெற்ற வெளிமாவட்ட கைதிகளும் அடங்குவர். "யார் பெரியவன்' என்ற "ஈகோ' பிரச்னையால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. ஒவ்வொரு பிரபல ரவுடியின் கீழ், 20 பேர் முதல் 30 பேர் வரை கைதிகள் செயல்படுகின்றனர். இவர்களது அத்துமீறல்களை தட்டிக் கேட்டால் தாக்குதல்தான். தொடரும் மோதல்கள் : கடந்த ஆண்டு மே 8ல் மதுரை தானப்ப முதலி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(24), திருப்பூரைச் சேர்ந்த ஜெயகாந்தன்(24) தாக்கப்பட்டனர். மே 9ல் குளியல் தொட்டி அருகே, சக கைதிகளிடம் குடிக்க தண்ணீர் கேட்க, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவருக்கு மண்டை உடைந்தது. அதேபோல், பிப்.,25ல் கைதிகள் ராஜா, ஆறுமுகத்திற்கு இடையே புத்தாடை உடுத்துவதில் மோதல் ஏற்பட்டது. ஏப்.,14ல் "தன்னை பற்றிதான் பேசுகிறார்களோ' என்று கைதிகள் ரமேஷ், கென்னடி, மாரிமுத்து ஆகியோர் நினைத்துக் கொண்டு மோதிக் கொண்டனர். மே 4ல் கைதிகள் கீரைத்துரை ரவிசண்முகம், ராமநாதபுரம் கணேஷ்பாபு, நிலக்கோட்டை பாபுராஜ் ஆகியோர் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் மோதிக் கொண்டனர். ஆக.,20ல் தண்டனை கைதிகள் மாரிமுத்து, ரமேஷ் ஆகியோருக்கு இடையே ஓரினசேர்க்கை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அது கடந்தாண்டு... இது இந்தாண்டு... : இந்நிலையில், நேற்று முன் தினமும் இரு கைதிகள் மோதிக்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்தவர் வெள்ளகுட்டி. மதகுபட்டி பகுதியில் நடந்த கொலை வழக்கில் "ரிமாண்ட்' செல்லில் உள்ளார். மதுரை ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தனபாண்டியன். தல்லாகுளம் பகுதி திருட்டு வழக்கில் இவரும் "ரிமாண்ட்' செல்லில் உள்ளார். இருவருக்கும் முன்விரோதம் இருக்கிறது. நேற்று முன் தினம், சமையல் கூடத்தில் சாப்பாடு எடுத்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெள்ளகுட்டி, சாப்பாடு கரண்டியால் தாக்கியதில், தனபாண்டியன் இடது கையில் காயம் ஏற்பட்டது. கை வீங்கிய நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். காவலர்களும் மீது தாக்குதல் : கைதிகளுக்கு இடையே நடக்கும் மோதலை தடுக்கும் காவலர்களும் தாக்கப்படுகின்றனர். இதற்கு பயந்தே சில காவலர்கள் உயிருக்கு பயந்து கிளை சிறைகளுக்கு இடமாற்றம் கேட்டு செல்கின்றனர். கடந்தாண்டுகூட, ஜூலை 1ல், சக கைதிகளின் உடைமைகளை பறித்து மிரட்டிய, மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த திருமூர்த்தியை விசாரித்த ஏட்டு சலீம்பாட்ஷாவுக்கு மூக்கில் குத்து விழுந்தது.

என்ன செய்கிறது உளவுப்பிரிவு? : சிறையில் நடக்கும் சட்டவிரோத செயல்களையும், எந்தெந்த கைதிகளால் பிரச்னை ஏற்படும் என்பதையும் கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப ஏற்படுத்தப்பட்டதுதான் விழிப்பு மற்றும் உளவுப்பிரிவு. மதுரை சிறையில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் இரு போலீசார் பணியில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் வரை, பிரச்னைக்குரிய கைதிகள் குறித்து அறிக்கை அனுப்பி, வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்ய இப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தற்போது பெயரளவிற்கு மட்டுமே இயங்குவதால், சின்ன சின்ன விஷயங்களுக்குகூட கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சிறை நிர்வாகம் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரி சொல்வது என்ன?: சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ""மற்ற சிறையை ஒப்பிடும்போது, கைதிகள் மோதல் சம்பவங்கள் மிக குறைவு. சின்ன சின்ன விஷயங்களுக்காக திடீரென்று மோதுகின்றனர். இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்க, துணை ஜெயிலர், 4 உதவி ஜெயிலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கைதிகள் "டென்ஷன்' ஆகாமல் இருக்க யோகா, தியான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன,'' என்றார்.

Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=172330

0 comments:

Post a Comment

 
Madurai -The City Never Sleeps ◄Design by Pocket, BlogBulk Blogger Templates