மதுரை: மதுரையில் பத்தாண்டு இழுபறிக்கு பின் செல்லூர் - தத்தனேரி மேம்பாலத்தை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று திறந்து வைத்தார்.மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் செல்லூர் - தத்தனேரி சாலை முதலிடம் வகித்தது. மதுரை - சென்னை இடையே முக்கிய ரயில்வே வழித்தடம் தத்தனேரி வழியாக செல்கிறது. இவ்வழித்தடத்தில் தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கிறது.
ரயில்கள் செல்ல "கேட்' அடைக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். 2001ல் 18 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது.பாதியில் நின்ற கட்டுமானப்பணி: இதன்படி, 2003ல் சென்னை மாணிக்கம் அண்ட் கம்பெனிக்கு மேம்பாலம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி மேம்பாலம் கட்ட கூடுதல் தொகையை கேட்டு அக்கம்பெனி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இதனால், மேம்பாலப்பணி 2004ல் நிறுத்தப்பட்டது.
2009ல் கட்டுமானப்பணி துவக்கம்: பின், 2009ல் 29 கோடி ரூபாய் மதிப்பில் வேறு ஒரு கம்பெனியிடம் கட்டுமானப்பணி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டுக்குள் பாலப்பணிகள் முடிக்கப்பட்டது.மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று புதிய பாலத்தை திறந்து வைத்தார். பின், காரில் சென்று பாலத்தை பார்வையிட்டார். அவருடன், கலெக்டர் சி. காமராஜ், நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீரங்கன் (திட்டம்), கோட்ட பொறியாளர் கணேசன், ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே. கோயல், கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி
கமிஷனர் செபாஸ்டின் உட்பட பலர் சென்றனர்.தத்தனேரியில் இருந்து செல்லூரில் பாலம் முடியும் இடத்தில் மூன்று மாதத்திற்குள் ரவுண்டானா அமையவுள்ளது. விழா முடிந்ததும் பாலத்தில் போக்குவரத்து துவங்கியது.சுரங்கப்பாலம் எப்போது: தத்தனேரி ரயில்வே வழித்தடத்திற்கு கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் ரயில்வே சார்பில் சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டன.இதை ஆய்வு செய்த பாதுகாப்பு பிரிவினர், போக்குவரத்திற்கு பயன்படுத்த அனுமதித்தனர். எனினும், சுரங்கப்பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கவில்லை. இதனால், சுரங்கப்பாலம் பயன்படாமல் உள்ளது.
Courtesy :http://www.dinamalar.com/district_detail.asp?id=171384
0 comments:
Post a Comment